EV வாகன தயாரிப்பில் முதலீடு.. Tata Motors திட்டம்..!!
EV எனப்படும் மின்சார மோட்டார் வாகனங்களை தயாரிப்பதில் அதிக முதலீடு செய்ய உள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் தற்போது அனைவரும் Electric இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை விரும்ப தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரவுள்ள 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் கோடி ரூபாயை மின்சார வாகனங்களை தயாரிப்பதற்காக முதலீடு செய்ய இருப்பதாக டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன வர்த்தப் பிரிவின் தலைவர் சைலேஷ் சந்திரா கூறியுள்ளார். நெக்சான் போன்று புதிய மின்சார வாகனங்களை தயாரிப்பதில் டாடா மோட்டார்ஸ் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்த நிலையில், அடுத்து வரும் 5 ஆண்டுகளில், மின் வாகன தயாரிப்புகளுக்காக மட்டும் ரூ.15,000 கோடியை முதலீடு செய்ய போவதாகவும், மாறுபட்ட 10 புதிய வாகனங்களை உருவாக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் சைலேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான டிபிஜியிடமிருந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 100 கோடி டாலர் திரட்டி உள்ளதால், டாடா மோட்டார்ஸ் நிறுவன மின்சார வாகன வர்த்தப் பிரிவின் மதிப்பு 910 கோடி டாலராக உயர்ந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இதுவரை 22 ஆயிரம் மின்சார வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
மின்சார கார் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 20 முதல் 25 சதவீதம் வரையே இருந்ததாகவும், தற்போது மின்சார வாகனங்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 65 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் சைலேஷ் சந்திரா குறிப்பிட்டுள்ளார்.