மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு ரூ.1,547 நிதி ஒதுக்கீடு – மகப்பேறு மருத்துவ திட்டத்துக்கு ரூ.817 கோடி ஒதுக்கீடு
முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,547 கோடி நிதி ஒதுக்கப்படும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
2022-23-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முதல்வரின் முகவரி’ திட்டம் மூலம் 10 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ திட்டத்திற்கு ரூ. 817 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ₨17,901 கோடி நிதி ஒதுக்கீடு எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் இந்தோ – ஐரோப்பிய மொழிகள் தொடர்பு குறித்து ஆராய குழு அமைக்கப்படும் என்றும் அதற்காக 2 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாராஜன் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளில் 6 – 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும், கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்த ரூ. 135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ₹1000 கோடி ஒதுக்கீடு, சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு செய்யவுள்ளதாகவும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புக்காக ரூ.450 கோடியும், பேருந்துகள் நவீன மயமாக்கல், மின் பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ. 5375 கோடி நிதியும், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மேம்பாட்டிற்கு ₨18218 கோடியும், நீர்வளத்துறைக்கு ₨7,338.36 கோடி நிதியும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ. 20, 400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.