சிறந்த விவசாயிகளுக்கு சிறப்பு பரிசு.. – வேளாண் நிதிநிலை அறிக்கையில் தகவல்.!!
வேளாண்துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு இனி சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
2022-23-ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அவர், மதிப்பு கூட்டல் மற்றும் உணவு பதப்படுத்த 3 மிகப்பெரிய உணவு பூங்கா அமைக்க ரூ.381 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.
விவசாயிகள் இடுபொருட்களை பெறும்போது பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,
உற்பத்தி முதல் விற்பனை வரை சேவைகளை, விதை முதல் விளைச்சல் வரை தொழில்நுட்பங்களை முழுமையாக மின்னணு முறையில் விவசாயிகள் பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய கூலித் தொழிலாளர்களை வட்ட, மாவட்ட அளவில் ஒருங்கிணைக்க புதிய திட்டம் தொடங்கப்படும் என்றும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு உயர் ரக மரங்கள் வழங்கி மரம் வளர்ப்பு திட்டம் ஊக்குவிக்கப்படும் என அறிவித்துள்ள அமைச்சர், எண்ணெய் வித்து சாகுபடியை அதிகப்படுத்த 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக டான்ஜெட்கோவுக்கு 5 ஆயிரத்து 157 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.