உழவர் சந்தைகளுக்கு சிறப்பு கவனம்.. – நச்சு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்க நிதி ஒதுக்கீடு.!!
2022-23-ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில், 50 உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ.15 கோடியும், புதிதாக உழவர் சந்தைகள் உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கரும்பு உற்பத்தி அதிகரிக்க சிறப்பு கவனம் செலுத்தும் வகையில், கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன்னுக்கு ரூ.195 வழங்கப்படும் என்றும், கரும்பு விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.2950-ம், கரும்பு சாகுபடிக்கு உதவியாக 10 கோடி ரூபாயில் உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும்,
தென்னை, மா, கொய்யா, வாழை உள்ளிட்டவை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு 38,000 ஏக்கர் பரப்பளவில் ரூ.27.51 கோடியில் ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனீக்கள் வளர்ப்பை ஊக்குவிக்க 37 தேனீ தொகுப்புகள் ரூ.8.51 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
தக்காளி உற்பத்தி குறைவாக இருக்கும் மே, ஜுன், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சாகுபடியினை அதிகரிக்கும் விதமாக தக்காளி விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக அல்லது இடுபொருட்களுக்காக ஒரு ஏக்கருக்கு 8 ஆயிரம் ரூபாய் மானியத்திலிருந்து, ஐந்தாயிரம் ஏக்கரில், இந்த திட்டம் 4 கோடி ரூபாய் மானியத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதியில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கைப்பேசியால் இயக்கப்படும் தானியங்கி பம்பு செட்டுகளை கட்டுப்படுத்தும் கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவியர் விடுதிகளிலும் காய்கறி, பழங்கள், மூலிகை செடிகளுக்கான தோட்டம் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், முருங்கை நாற்றங்கால்கள் அமைக்கப்பட்டு முருங்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும் எனவும் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.