இந்திய இயக்குநர் மாற்றம்.. மாருதி சுசுகி இயக்குநர் குழு முடிவு..!!
மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகியின் இந்திய பிரிவின் இயக்குநராக ஹிஷாசி டாக்யுச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் புகழ் பெற்ற ஆட்டோ மொபைல் நிறுவனமான மாருதி சுசுகி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மின்சார கார்களை உற்பத்தி செய்வதில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறது. மேலும், ஹரியானா மாநிலம் சோனிபாட் என்ற இடத்தில் புதிய, பெரிய கார் உற்பத்தி ஆலையை தொடங்க திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில், மாருதி சுசுகியின் இந்திய பிரிவின் நிர்வாக இயக்குநரை மாற்றி அமைத்து, அந்நிறுவன இயக்குநர் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாருதி சுசுகி வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது மாருதி சுசுகியின் இந்திய பிரிவின் இயக்குநர் (Managing Director) மற்றும் தலைமை செயல் அதிகாரியாக (Chief Executive Officer) உள்ள கெனிச்சி அயுகாவின் பதவிக் காலம் இந்த மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து அந்த பதவிக்கு புதிய நபரை நியமிப்பது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில், மாருதி சுசுகி இந்திய பிரிவு இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஹிஷாசி டாக்யுச்சியை நியமனம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து ஹிஷாசியின் நியமனம் நடைமுறைக்கு வருவதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.
ஆனால், மாருதி சுசுகி நிர்வாக துணைத்தலைவராக இருக்கும் கெனிச்சி, நடப்பு ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரை முழு நேர இயக்குநராக தொடர்ந்து செயல்படுவார் என்றும், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வேண்டிய ஆலோசனைகளை வழங்கி, வழிநடத்துவார் எனவும் மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்துள்ளது.