வட்டி செலவை குறைக்க திட்டம்.. நிலுவை தொகையை செலுத்திய Airtel..!!
பார்தி ஏர்டெல், 2015-ல் வாங்கிய ஸ்பெக்ட்ரத்திற்கான ஒத்தி வைக்கப்பட்ட கடன்களைத் தீர்க்க ரூ.8,815 கோடியை முன்கூட்டியே செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
2014-ம் ஆண்டு நடந்த ஏலத்தில் ஏர்டெல் நிறுவனம் வாங்கிய அலைக்கற்றைக்காக, அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.15,519 கோடியை முன்னதாக செலுத்தியது.
இந்தக் கடன்கள் FY2026-2027 முதல் FY2031-2032 வரையிலான வருடாந்திர தவணைகளில் செலுத்தப்பட்டன . கடந்த நான்கு மாதங்களில், ஏர்டெல் அதன் ஒத்திவைக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் கடன்களில் ரூ.24,334 கோடியை திட்டமிடப்பட்ட முதிர்வுகளுக்கு முன்பே செலுத்தியுள்ளது.
முன்பணம் செலுத்துவதன் மூலம் குறைந்தபட்சம் ரூ.3,400 கோடி வட்டிச் செலவுகள் சேமிக்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்தச் சேமிப்பு, 4G மற்றும் 5G-க்களை விரிவுபடுத்துவதற்கு முதலீடுகளைச் செய்யும் போது, நிறுவனத்தின் மூலதனச் செலவு மற்றும் பணப் புழக்கங்களுக்கு உதவும் என்றும் பார்தி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனம் 2014 ஏலத்தில் 128.4 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ரூ.19,051 கோடிக்கு வாங்கியது. இதில் டெலினாரின் இந்தியா யூனிட்டிற்கு சொந்தமான ஸ்பெக்ட்ரமும் அடங்கும்.