இணைந்தன பிவிஆர் ஐநாக்ஸ்.. – யாருக்கு.. எவ்ளோ பங்குகள்..!!
இந்தியாவின் இரண்டு மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் திரையரங்குகளான PVR Limited மற்றும் Inox Leisure Limited ஆகியவை இணைந்துள்ளன.
இதுகுறித்து, இரு நிறுவனங்களின் இயக்குநர்கள் குழு கூட்டம் கூடி, அதில் இரண்டும் இணைவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இரண்டு நிறுவனங்கள் இணைய, ஒழுங்குமுறை ஆணையங்களின் அனுமதி, பங்குச் சந்தை நிறுவனங்கள் மற்றும் செபி அமைப்பின் அனுமதி தேவை. ஆனால், வருமானம் ஆயிரம் கோடிக்குள் இருப்பதால், போட்டி ஒழுங்குமுறை ஆணையமான சிசிஐ-யின் அனுமதி தேவையில்லை என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த இணைப்பின் மூலம், 10 Inox பங்குகளை வைத்துள்ளவர்களுக்கு 3 PVR பங்குகள் கிடைக்கும். ஒருங்கிணைந்த நிறுவனத்தில் ஐநாக்ஸ் நிறுவனர்களுடைய பங்குகள் 16.66 சதவீதமாகவும், பிவிஆர் நிறுவனர்களுடைய பங்குகள் 10.62 சதவீதமாகவும் இருக்கும் என்றும், ஒருங்கிணைந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருங்கிணைந்த நிறுவன இயக்குநர்கள் குழுவின் எண்ணிக்கை 10-ஆக இருக்கும்.
பிவிஆரின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜய் பிஜ்லி இணைக்கப்பட்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றுவார், மேலும் சஞ்சீவ் குமார் பிஜிலி நிர்வாக இயக்குநராக இருப்பார். ஐனாக்ஸ் நிறுவனத்தின் தலைவர் பவன் குமார் ஜெயின், செயல் அல்லாத தலைவராக நியமிக்கப்படுவார்.
ஐநாக்ஸ் இயக்குநரான சித்தார்த் ஜெயின், ஒருங்கிணைந்த நிறுவனத்தில் நிர்வாகமற்ற இயக்குனராக நியமிக்கப்படுவார். இணைக்கப்பட்ட நிறுவனத்தின் குழுவில் 10 இயக்குநர்கள் இருப்பார்கள், மேலும் இரண்டு முதலீட்டாளர் குடும்பங்களுக்கும் தலா இரண்டு போர்டு இருக்கைகள் இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய திரையரங்குகள் இணைப்புக்கு பிறகு திறக்கப்படும் என்றும், இணைக்கப்பட்ட நிறுவனத்துக்கு பிவிஆர் ஐநாக்ஸ் லிமிடெட் என்று பெயரிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது. ஆனால், தற்போது உள்ள திரையரங்குகளின் பெயர்கள் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் என்றே தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.