இன்றும் எகிறிய பெட்ரோல், டீசல் விலை..டெல்லியில் ரூ.100-ஐ கடந்த பெட்ரோல்!!
சென்னையில் கடந்த 8 நாட்களில் 7-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
பல்வேறு காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதிலும், கடந்த 4 மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதனால், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(IOC), இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்(HPCL) மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்(BPCL) ஆகிய பொதுத்துறை பெட்ரோலிய நிலையங்களுக்கு ரூ.19 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மூடிஸ் முதலீட்டு சேவை நிறுவனம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.
இதேபோல், முதலீடுகள் தொடர்பான ஆய்வுகளை செய்து வரும் கிரிசில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று கருத்து வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 8 நாட்களில் 7-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று(29.03.2022) ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் அதிகரித்து ரூ.105.94 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 67 காசுகள் உயர்ந்து 96 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல்ரூ.115.04-ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.25-ஆகவும் விற்பனையாகிறது.
கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.109.68 காசுகளாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.62 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லியை பொறுத்தவரை ஒரு லிட்டர் பெட்ரோல் முதன்முறையாக 100 ரூபாயை கடந்து ரூ.100.21-ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.41-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் விதிக்கப்படும் உள்ளுர் வரியை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்த காரணத்தாலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், பிரண்ட் கச்சா எண்ணெய் கடந்த 8 நாட்களில் சுமார் 13 டாலர் அளவுக்கு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.