2021-22 நிதியாண்டில் 1 லட்சம் பணியாளர்கள் நியமனம்.. TCS சாதனை..!!
Tata Consultancy Services நிறுவனம் கடந்த 2021-22-ம் நிதியாண்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமனம் செய்து சாதனைப் படைத்துள்ளது.
உலகளவில் தகவல் தொழில்நுட்ப (IT) சேவைத் துறையில், இரண்டாவது மதிப்புமிக்க பிராண்டாக டாடா கன்ஸல்டன்சி சர்வீஸஸ் (TCS) நிறுவனம் விளங்கி வருகிறது.
அண்மையில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் கனடா மற்றும் அமெரிக்காவில் தலா ஒன்று என இரண்டு திட்டங்களை கைப்பற்றி உள்ளது.
இந்நிலையில், Tata Consultancy Services கடந்த நிதியாண்டில் அதிக அளவில் பணியாளர்களை பணியமர்த்தி சாதனைப் படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போது மொத்தம் 5 லட்சத்து 92 ஆயிரத்து 195 பேர் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 2021-22-ம் நிதியாண்டில் மட்டும், 1 லட்சத்து 3 ஆயிரத்து 546 பேர் TCS-ல் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 78,000 பேர் புதியவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிகமானவர்கள் பணி செய்ய விரும்பும் நிறுவனமாக டிசிஎஸ் நிறுவனம் இருப்பதாக அந்நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரி மிலிந்த் லக்கட் தெரிவித்தார்.
கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில், டிசிஎஸ் ரூ.9 ஆயிரத்து 959 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. நேற்று(11.04.2022-திங்கள்) பங்குச்சந்தை முடிவடையும்போது, டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கின் விலை 3,696.40 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.