இன்னும் முகேஷ் அம்பானி தான் ராஜா
இன்னும் முகேஷ் அம்பானி தான் ராஜா
அரியாசனத்தை விட்டு கொடுக்காத முகேஷ்…
திருபாய் செய்த தவறில் இருந்து முகேஷ் கற்ற பாடம்…
முகேஷ் அம்பானி தனது சாம்ராஜியத்தின் முக்கிய பகுதியான ஜியோவின் தலைவராக, தனது மகன் ஆகாஷ் அம்பானியை அறிவித்துள்ளார். இது முகேஷ் அம்பானியின் மகன்கள் மற்றும் மகள் இடையே எந்த பிரச்சனையும் வந்து விடாமல் பார்த்து கொள்ளும் பொருட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பு தன் வாரிசுகளுக்கு மாற்றப்படும் என்ற பேச்சு கடந்த சில மாதங்களுக்கு முன்பே எழுந்த நிலையில், அதனை படிப்படியான முகேஷ் அம்பானி நிறைவேற்றி வருகிறார். இது திருபாய் அம்பானியிடம் இருந்து, ரிலையன்ஸ் என்ற சொத்து அம்பானி சகோதரர்கள் கைக்கு வந்த போது ஏற்பட்ட கசப்பான அனுபவங்களில் இருந்து முகேஷ் அம்பானி கற்று கொண்ட பாடம் என்றே கருதப்படுகிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த திருபாய் அம்பானி, 2002ம் ஆண்டு இறந்த நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொறுப்புகள் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானியின் வசம் வந்தது. இந்த தொழிலில், அனில் அம்பானியை விட அனுபவம் பெற்றவறாக முகேஷ் இருந்ததன் காரணமாக, அவரின் கையே சற்று ஓங்கி இருந்தது. இந்நிலையில், அனில் மற்றும் முகேஷ் இடையே ஏற்பட்ட பிரச்சனை 2005 ஆண்டு வாக்கில் பூதாகரமாகி, 2005 ஆண்டு டிசம்பர் மாதம் திருபாய் அம்பானியின் சொத்துக்கள், முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானியிடையே பிரித்து கொடுக்கப்பட்டது. திருபாய் அம்பானியின் மனைவி கோகிலா பென் மேற்பார்வையில், அண்ணன், தம்பி இருவருக்கும் சொத்துக்கள் பிரித்து கொடுக்கப்பட்டன. அப்போது, மேற்கொள்ளப்பட்ட முக்கியமான ஒப்பந்தங்களில் ஒன்று, ஒருவர் இருக்கும் தொழிலில், மற்றொருவர் 10 ஆண்டுகளுக்குள் போட்டியாக வர கூடாது என்று கையொப்பமிடப்பட்டது. இதன் காரணமாக தான், முகேஷ் அம்பானி தன்னுடைய ஜியோ நிறுவனத்தை 2016ம் ஆண்டு வணிக ரீதியில் அறிமுகம் செய்தார்.
இப்படி, அம்பானி குடும்பத்தில், சொத்து பிரிப்பதில் ஏற்கனவே ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மீண்டும் வர கூடாது என்பதில் முகேஷ் அம்பானி மிகவும் கவனமுடன் செயல்பட்டு வருகிறார். முகேஷ் அம்பானியின் வாரிசுகள் பெயரில் தனித்தனியாக சொத்துக்கள் இருக்க வேண்டும் என்பதில் அவர் கவனமாக இருக்கிறார். இதன் காரணமாகவே, ரிலையன்ஸ் ரீட்டைல் நிறுவனம் தனது மகள் ஈஷா அம்பானியின் பொறுப்பிலும், தற்போது ஜியோ நிறுவனத்தின் தலைவராக தன்னுடைய மகன் ஆகாஷ் அம்பானியையும் அமர்த்தி உள்ளார். இருப்பினும், ரீட்டைல் மற்றும் ஜியோ என்ற இரண்டிற்கும் அடிப்படை பணம் என்பது ரிலையன்ஸ் நிறுவனத்தில் இருந்து தான் வருகிறது என்ற நிலையில், எண்ணெய் மற்றும் அதன் உப பொருட்களை விற்பனை செய்யும் ரிலையன்ஸ் நிறுவனம் தான், முகேஷ் அம்பானி சாம்ராஜ்ஜியத்தின் அரியாசனமாக தற்போதும் உள்ளது. ஜியோ மற்றும் ரீட்டைல் நிறுவனங்களை தன்னுடைய மகன் மற்றும் மகள் கட்டுப்பாட்டில் விட்டாலும், ரிலையன்ஸின் எண்ணெய் தொழில் முகேஷ் அம்பானியிடமே உள்ளது கவனிக்கத்தக்கது. தன் மகனை, முகேஷ் அம்பானி அரியாசனத்தில் ஏற்றி அழகு பார்த்தாலும், தற்போதும் ரிலையன்ஸ் என்ற சாம்ராஜ்ஜியத்தின் ராஜா முகேஷ் அம்பானி தான் என்பதை மறுப்பதற்கு இல்லை.