தயாரிப்பில் இருந்து வெளியேறவும் தயங்க மாட்டோம் : மாருதி
மத்திய அரசின் கொள்கை காரணமாக சிறிய கார் தயாரிப்பில் இருந்து வெளியேறவும் தயங்க மாட்டோம் என்று மாருதி நிறுவனத்தின் ஆர்.சி.பார்கவா தெரிவித்துள்ளார்.
அண்மையில் மத்திய அரசு, காரில் பயணம் செய்யும் பயணிகளுக்காக 6 ஏர் பேக்குகள் இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரவுள்ளாதாக தெரிவித்தது.
இதனால் கார்களின் விலை இன்னும் அதிகரிக்குமே தவிர சாலை விபத்துக்கள், அதனால் ஏற்படும் மரணங்களை தவிர்க்க முடியாது என்று பார்கவா தெரிவித்தார். மேலும் இந்த கொள்கை முடிவினால் இந்தியப் பங்குச் சந்தையில் மாருதியின் பங்குகள் பெருமளவில் சரியக் கூடும் என்று கவலையுடன் கூறினார்.
கார்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதைக் காட்டிலும், சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை குறைக்க மத்திய அரசு முன்வரவேண்டும் என்று கூறிய பார்கவா, இரு சக்கர வாகனங்களில் 43 சதவிகிதம் மரணங்களும், பாதசாரிகள் 18 சதவிகிதமும் மரணமடைகின்றனர் என்று மத்திய சாலை போக்குவரத்துக் அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ள தரவுகளை சுட்டிக் காட்டினார்.
இதனால் அதிக விலை கொடுத்து கார்களை வாங்குவதைக் காட்டிலும், பைக்குகளை வாங்கவே குறைந்த வருமானம் கொண்டவர்கள் விரும்புவார்கள் என்றார் அவர்.
பிஎஸ் 6 ரக கார்களை தயாரிப்பதில் ஏற்படும் செலவினம் காரணமாக, 28 சதவீதம் விற்பனை குறைந்து விட்டது, என்றும் ஆர்.சி. பார்கவா தெரிவித்தார்.