தொழிலாளர் நல சட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை
தொழிலாளர் நல சட்டத்தில் இன்று (ஜுலை 1) முதல் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைக்கு, எந்த மாற்றமும் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, ஜூலை 1ம் தேதி முதல் புதிய தொழிலாளர் சட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
அவ்வாறு அமலுக்கு வரும் நிலையில், மாத சம்பளத்தில் கூடுதல் பிடித்தம் செய்யப்படும். இந்த புதிய சட்டத்தின் படி, ஒருவரின் மொத்த சம்பளத்தில் 50 சதவிதம் அடைப்படை சம்பளமாக இருக்க வேண்டும். அடைப்படை சம்பளத்தில் இருந்து 12 சதவிதம் வருங்கால வைப்பு நிதிக்கு பிடித்தம் செய்யப்படுகிறது. தற்போது ஒருவரின் மாத சம்பளம் 50 ஆயிரம் ரூபாய் என்று வைத்து கொள்வோம். அதில் அவரின் அடிப்படை சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் தான் இருக்கும்.
இந்த 15 ஆயிரத்திற்கு 12 சதவிதம் என்ற அளவில் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் தற்போது செய்யப்படுகிறது. இந்த புதிய சட்டம் அமலுக்கு வரும் போது, 50 ஆயிரத்தில், அடிப்படை சம்பளம் என்பது 25 ஆயிரமாக மாறிவிடும். இந்நிலையில், இந்த 25 ஆயிரம் ரூபாய்க்கு 12 சதவிதம் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு செய்யும் போது ஒவ்வொரு மாதமும், கைக்கு வரும் சம்பளம் குறையும்.
அதாவது, பிடித்தம் அதிகம் ஆகும். இது புதிய ஊழியர்கள் சட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் மட்டும் தான், நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போதைக்கு இது குறித்த எந்த முடிவும் எட்டப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. புதிய தொழிலாளர் சட்டம் அமலுக்கு வரும் போது தான் இந்த விதிகள் நடைமுறைக்கு வரும். அதேபோல், வேலை நாள் குறைப்பு என்பன போன்ற அம்சங்களும் அந்த சட்டத்தில் உள்ளன.