தங்கம்- விலை அதிகரிக்க வாய்ப்பு?!
தங்கத்தின் இறக்குமதி வரி அதிகரித்துள்ள நிலையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவும் தங்கத்தின் விலை வரும் நாட்களில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன. தங்கத்தைப் பொறுத்தவரை உலகிலேயே அதிக இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில், தங்கத்தின் மீதான மொத்த வரி 10 புள்ளி 75 சதவீதமாக இருந்தது. கொரோனா வைரஸ் தொடங்கியதில் இருந்து இந்தியாவில் தங்கம் இறக்குமதி அதிகரித்த நிலையில், 2021ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டது.
கடந்த மே மாதத்தில் மட்டும் மொத்தம் 107 டன் அளவிற்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. ஜூன் மாதத்திலும் இறக்குமதி அதிக அளவில் இருந்தது. தொடர்ச்சியாக தங்கம் இறக்குமதி அதிகரிப்பு, ஏற்றுமதிக்கு இறக்குமதிக்கு இடையே உள்ள வித்தியாசமான, நடப்பு கணக்கு பற்றாக்குறையில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையிலிருந்து வெளியேறிவருவதால், டாலர் கையிருப்பு குறைந்து வருகிறது. இதனால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதை தடுக்கவும், வர்த்தக பற்றாக்குறையை குறைக்கவும், தங்கம் இறக்குமதியை குறைக்கவும் தங்கத்திற்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தங்கம் இறக்குமதி வரி 10 புள்ளி 75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தங்கத்தின் மீதான அடிப்படை சுங்க வரி 7 புள்ளி 5 சதவீதமாக இருந்தது. இது தற்போது 12 புள்ளி 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சுங்கவரியுடன் வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் வரியான 2 புள்ளி 5 சதவீதமும் இணைந்து கொண்டால், தங்கத்தின் சுங்க வரியானது 15 சதவீதமாக இருக்கும்.
இதனால் ஒரு கிராம் தங்கத்தில் விலை கிராமுக்கு 300 ரூபாய் வரை அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது.