டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிய வாய்ப்பு
வர்த்தக பற்றாக்குறை காரணமாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன் எப்போது இல்லாத அளவாக 79 ரூபாய் 37 காசுகள் என்ற அளவிற்கு சரிந்துள்ளது. இதன் காரணமாக, இனி வரும் காலங்களில், ஒரு டாலரின் மதிப்பு சுமார் 82 ரூபாய் வரை சரியலாம் என கணிப்புகள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக, ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்களின் முதலீட்டை வெளியே எடுத்து செல்லும் செயல் தொடரும் பட்சத்தில், இந்த சரிவு மேலும் அதிகரிக்கும் என்றும், 2022ம் ஆண்டு மூன்றாம் காலாண்டில், ஒரு டாலரின் மதிப்பு 82 ரூபாய் வரை செல்ல கூடும் என தெரிகிறது. எதிர்வரும் நாட்களில் நிலைமை சீறாகும்பட்சத்தில், 4வது காலாண்டில், 81 ரூபாய் வரை உயர வாய்ப்புகள் உள்ளதாக கணிப்புகள் வெளியாகி உள்ளது. அமெரிக்க ஃபெடரல் வங்கி, தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தி வருவது, டாலரின் மதிப்பு வலுவடையும் நிலைக்கு கொண்டு செல்லும். இதுவும் ரூபாயின் மீதான தாக்கத்தை அதிகரிக்கும் என தெரிகிறது.