சரக்கு மற்றும் சேவை வரிகளும், முரண்பாடுகளும்!
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தற்போதைய சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்திய விதமே தவறு என்று தொடர்ந்து சொல்லி வருகிறார். 5%, 12%, 18%, 28% என்று பல விதங்களில் வரிகள் இருக்க கூடாது என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில், அண்மையில், சரக்கு மற்றும் சேவை வரி குறித்து பேசிய வருவாய் துறை செயலாளர் தருண் பஜாஜ், இந்தியாவில் ஒரே ஒரு குறிப்பிட சதவிதத்தில், சரக்கு மற்றும் சேவை வரியை கொண்டு வருவது தற்போதைய நிலையில் சரியாக இருக்குமா என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார். மாற்றாக, 5%, 12% மற்றும் 18% என்ற மூன்று வரி வகைகளை நீக்கிவிட்டு, முதற்கட்டமாக, அதை 2 ஆக குறைக்கலாம் என்று கூறியுள்ளார்.
தற்போதைய நிலையில், இது கூட சிரமம் தான் என்று கூறியுள்ள தருண் பஜாஜ், அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில், இதனை மேலும் செழுமை படித்த வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார். பெட்ரோல், டீசல் விலையை சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தில் கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாக கூறிய தருண் பஜாஜ், குறைந்தபட்ச விமான எரிபொருள் மற்றும் எரிவாயுவை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும், அதை செய்வதற்கு கால அவகாசம் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.