கச்சா எண்ணெய் சரிந்தும் விலை உயர்ந்த எரிவாயு
கச்சா எண்ணெய் விலை சரிய தொடங்கி உள்ள நிலையில், சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டு இருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கச்சா எண்ணெய் விலை இன்று ஒரே நாளில் 9 டாலர் அளவிற்கு சரிந்துள்ளது. அதே சமயம், இந்தியாவில் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில், இந்தியாவில் எரிபொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் 3 முறை எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் 14 புள்ளி 2 கிலோ எடை கொண்ட, வீட்டு உபயோக சிலிண்டர் விலை, கடந்த பிப்ரவரி மாதத்தில் 915 ரூபாயாக இருந்தது. அதை தொடர்ந்து, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தலா 50 ரூபாயும், மே மாதத்தில் 3 ரூபாய் 50 காசுகளும் உயர்த்தப்பட்டன. இதனால் கடந்த மாதத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் ஆயிரத்து 18 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகி வந்தது. இந்நிலையில், வீட்டில் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டு, சென்னையில் ஆயிரத்து 68 ரூபாய் 50 காசாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், எரிவாயு இணைப்பு பெறுவதற்கான கட்டணமும் அண்மையில் அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை அதிகரித்து வருவது சாமானிய மக்களை மேலும் கலக்கமடைய செய்துள்ளது.