சமையல் எண்ணெய் – ரூ.10 வரை விலை குறைக்க உத்தரவு
இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்களின் அதிகபட்ச சில்லறை விலையை (MRP) ஒரு வாரத்திற்குள் லிட்டருக்கு ரூ.10 வரை குறைக்கவும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான எம்ஆர்பியை பராமரிக்கவும் சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக இறக்குமதி செய்வதால், கடந்த சில மாதங்களாக சில்லறை விலைகள் அழுத்தத்திற்கு உள்ளாகின.
கடந்த மாதம் சமையல் எண்ணெய் தயாரிப்பாளர்கள் லிட்டருக்கு 10-15 ரூபாய் வரை விலையை குறைத்துள்ளனர்.
உணவுத்துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே கூறுகையில், பாமாயில், சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் போன்ற இறக்குமதி செய்யப்படும் அனைத்து சமையல் எண்ணெய்களிலும் அடுத்த வாரத்திற்குள் லிட்டருக்கு 10 ரூபாய் வரை MRP குறைக்கப்படும் என்று சமையல் எண்ணெய் தயாரிப்பாளர்கள் உறுதியளித்துள்ளனர், மேலும் இந்த சமையல் எண்ணெய்களின் விலைகள் குறைக்கப்பட்டவுடன், மற்ற சமையல் எண்ணெய்களின் விலையும் குறைக்கப்படும் என்று கூறினார். .
இது தவிர, தற்போது நாடு முழுவதும் லிட்டருக்கு ரூ.3 முதல் 5 வரை வித்தியாசம் இருப்பதால், ஒரே மாதிரியான எம்ஆர்பியை பராமரிக்குமாறு உற்பத்தியாளர்களை செயலாளர் கேட்டுக் கொண்டார்.
நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் தரவுகளின்படி, ஜூலை 6ஆம் தேதி, அகில இந்திய சராசரி சில்லரை விலை பாமாயில் கிலோ ரூ.144.16 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் கிலோ ரூ.185.77 ஆகவும், சோயாபீன் எண்ணெய் கிலோ ரூ.185.77 ஆகவும், கடுகு எண்ணெய் கிலோ ரூ.177.37 ஆகவும், கடலை எண்ணெய் கிலோ ரூ.187.93 ஆகவும் இருந்தது.