மின்சார வாகனங்களின் (EV) விலைகளும் பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு சமமாக இருக்கும் – கட்காரி
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வாகனங்களில் பெட்ரோல் பயன்படுத்துவது மறைந்துவிடும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தார்.
மகாராஷ்டிராவின் அகோலாவில் உள்ள பஞ்சாப் ராவ் தேஷ்முக் க்ரிஷி வித்யா பீடத்தில் டாக்டர் பட்டம் பெற்ற பின்பு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆற்றிய உரையில், “ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நாட்டிலிருந்து பெட்ரோல் மறைந்துவிடும் என்று முழு நம்பிக்கையுடன் கூற விரும்புகிறேன். உங்கள் கார்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் பசுமை ஹைட்ரஜன், எதோனல் ஃப்ளெக்ஸ் எரிபொருள், சிஎன்ஜி அல்லது எல்என்ஜியில் இருக்கும்” என்று அவர் கூறினார்.
முன்னதாக ஜூன் 17ஆம் தேதி, அனைத்து மின்சார வாகனங்களின் (EV) விலைகளும் ஒரு வருடத்திற்குள் நாட்டில் பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு சமமாக இருக்கும் என்று கட்காரி கூறியிருந்தார்.
அத்துடன் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக பயிர் எச்சங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எத்தனாலை அரசாங்கம் ஊக்குவித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.