இன்று இந்திய பங்குச்சந்தை உயர காரணம் இது தான்
இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து வர்த்தகத்தை நிறைவு செய்து உள்ளன. இந்திய பங்குச்சந்தைகள் இந்த வாரம் மட்டும் சுமார் 5 சதவிதம் அளவிற்கு அதிகரித்துள்ளது. அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை 0.75 சதவிதம் அதிகரித்துள்ளது. வட்டி விகிதம் அதிகபட்சமாக ஒரு சதவிதம் வரை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக சர்வதேச சந்தைகள் எதிர்ப்பார்த்து இருந்த நிலையில், குறைந்தபட்ச எதிர்பார்ப்பான 0.75 சதவிதம் அளவிற்கு மட்டுமே வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளதை சந்தைகள் சாதகமாக பார்க்கின்றன.
மேலும், பணவீக்கம் குறித்து பேசும் போது, அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பால், பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறியுள்ளார். இது சர்வதேச அளவில் மிக சாதகமான அம்சமாக பார்க்கப்பட்டது. இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1041 புள்ளிகள் அதிகரித்து 56 ஆயிரத்து 857 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, 288 புள்ளிகள் அதிகரித்து 16 ஆயிரத்து 929 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளன. இந்த உயர்வுக்கு வழிவகுந்த முக்கிய காரணிகள் என்று பார்த்தால்: –
- அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் இனி வரும் காலங்களில், வட்டி விகித உயர்வு நடவடிக்கையை குறைத்து கொள்ளும் என நம்பப்படுவதால், அமெரிக்க பங்குச்சந்தைகள் அதிகரித்துள்ளன. இதன் தாக்கம் இந்திய சந்தைகளில் எதிரொலித்துள்ளது.
- ஒரு சதவிதம் வரை வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ், 0.75 சதவிதம் மட்டுமே வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது, பணவிக்கம் குறைந்து வருவதை கட்டுவதாக பார்க்கப்படுகிறது.
- நீண்ட இடைவெளிக்கு பிறகு, அந்நிய முதலீட்டாளர்கள், இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய தொடங்கி உள்ளனர். இதன் காரணமாகவும், இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தது.
- டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இன்று இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் அதிகரித்து, 79 ரூபாய் 77 காசுகள் என்ற நிலையை அடைந்து இருக்கிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளதும் பங்குச்சந்தைகளின் உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.
இது போன்ற பல்வேறு காரணிகளால் இந்திய பங்குச்சந்தை அதிகரித்துள்ள நிலையில், இந்த உயர்வு இன்னும் எவ்வளவு நாட்கள் தொடரும் என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.