ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையே உள்ள இடைவெளி அதிகரிப்பு
ஜூலை மாதத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை கடந்த 20 மாதங்களில் முதன்முறையாக 31.02 பில்லியன் டாலராக உயர்ந்தது என்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையே உள்ள இடைவெளி-கடந்த ஆண்டு ஜூலையில் அறிவிக்கப்பட்ட $10.63 பில்லியன்களிலிருந்து மூன்று மடங்கு அதிகரித்ததுள்ளதாகவும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் செவ்வாயன்று வெளியிட்ட தரவு காட்டுகிறது.
அதிகரிக்கும் பற்றாக்குறை, டாலருக்கு எதிராக அதிகரித்து வரும் ரூபாயின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். கடந்த சில நாட்களுக்கு முன்பு டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 80.16 என்ற வாழ்நாள் குறைந்த அளவினை தொட்டது நினைவிருக்கலாம்.
அதிகரித்து வரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தவும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்தவும் அண்மையில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அரசாங்கம் உயர்த்தியது
கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்தவரை ப்ரெண்ட் கச்சா விலையானது, மாதத்தின் தொடக்கத்தில் ஒரு பீப்பாய்க்கு $111 ஆக இருந்த நிலையில், செவ்வாய்கிழமையன்று $100க்கு கீழே குறைந்துள்ளது. பெட்ரோலியம் இறக்குமதி ஜூலை மாதத்தில் மதிப்பு அடிப்படையில் 70% அதிகரித்து 21.1 பில்லியன் டாலராக இருந்தது.
நிலக்கரி இறக்குமதி கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து $5.17 பில்லியனாக இருந்தது, ஆனால் ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட $6.76 பில்லியனை விட குறைவாக இருந்தது என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சக செயலாளர் சுப்ரமணியம் தெரிவித்தார்.