வங்கி வட்டி விகிதம் – ஏன்? எவ்வளவு? முன்னர் எப்படி இருந்தது?
இந்திய ரிசர்வ் வங்கி, ரெபோ வட்டியை, 0.50 சதவிதம் அளவிற்கு அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, வங்கிகள் வாங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4.90 சதவிதத்தில் இருந்து 5.40 சதவிதமாக அதிகரித்துள்ளது. 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6.25 சதவிதமாக இருந்த ரெபோ வட்டி விகிதம் 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 5.15 சதவிதமாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரொனாவின் தாக்கம் காரணமாக, நாடு முழுவதும் பொது முடக்கம் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக தொழில்த்துறை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்க தொடங்கியது.
அதன் படி, 2020 மார்ச் மாதத்தில் ரெபோ வட்டி விகிதம் 4.40 சதவிதமாக குறைக்கப்பட்டது. பின்னர் மீண்டும், 2020ம் ஆண்டு மே மாதம் மீண்டும், 0.40 சதவிதம் வட்டி குறைக்கப்பட்டது. இதன் மூலம் ரெபோ வட்டி விகிதம் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு 4 சதவிதமாகவே இருந்தது. இதன் காரணமாக, வீட்டுக்கடன், வாகனக்கடன் என பெரும்பாலான கடன்களின் வட்டி விகிதம் குறைந்தது. இது பணவீக்கத்தில் எதிரொலித்தது. அதனால், இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்க தொடங்கியது. இதன் படி, 2022ம் ஆண்டு மே மாதம், 4 சதவிதமாக இருந்த ரெபோ வட்டி விகிதம் 4.40 சதவிதமாக அதிகரிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 4.40 சதவிதமாக இருந்த ரெபோ வட்டி விகிதம், மீண்டும் ஜூன் மாதம் உயர்த்தப்பட்டு 4.90 சதவிதம் என்ற நிலையில் உள்ளது.
இந்நிலையில், இன்று அறிவிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் ரெபோ வட்டி விகிதம் 0.50 சதவிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்த வட்டி விகித உயர்வு முக்கியமானது என இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். இந்த வட்டி உயர்வின் மூலம், 4.90 சதவிதமாக இருந்த ரெபோ வட்டி விகிதம் தற்போது 5.40 சதவிதமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வீட்டு கடன், வாகன கடன், தொழில் கடன் என அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கும். தற்போதைய வட்டி விகிதம் உயர்வு, 0.50 சதவிதம் என்ற அளவில் உள்ளதால், வீட்டு கடன், வாகன கடன்களின் மாத தவணை குறைந்தபட்சம் ஒரு மாதம் வரை அதிகரிக்க வாய்ப்புகள் உருவாகி உள்ளது.