கோதுமை மாவு, ரவை, மைதா ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு
உலகிலேயே அதிக கோதுமை மற்றும் அது சார்ந்த பொருட்களை ரஷ்யா மற்றும் உக்ரைன் தான் ஏற்றுமதி செய்து வந்தன. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் காரணமாக கோதுமை ஏற்றுமதி தடைபட்டு உலகளவில் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் இருந்தது. இந்தியாவிலும் கோதுமை பொருட்கள் விலையும் உயர்ந்தன. இதனை கட்டுப்படுத்த மே மாதம் மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இந்த நிலையில் தற்போது மைதா, ரவை உள்ளிட்ட பொருட்களின் விலையும் இந்தியாவில் உயர்ந்துள்ளது. மேலும் வெளிநாடுகளுக்கு கோதுமை , மைதா உள்ளிட்டவையின் ஏற்றுமதி 2020-2021 நிதியாண்டில் முதல் காலாண்டை ஒப்பிடுகையில் 200விழுக்காடு அதிகரித்தது. இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு அமைச்சரவை கூட்டத்தில் இந்த பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசின் அமைச்சரவை முடிவை ஏற்ற அந்நிய வர்த்தக இயக்குநரகம், கோதுமை , ரவை, மைதா உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
ஏன் இந்த தடை என்பதற்கான ஒப்பீடு :
2021ஆகஸ்டில் இந்தியாவில் சில்லறையில் ஒரு கிலோ கோதுமை சராசரியாக 22 ரூபாய் 41 பைசாவாக இருந்தது . இந்த விலை தற்போது சராசரியாக 22விழுக்காடு அதிகரித்து ஒரு கிலோ 32 ரூபாய் 04 பைசாவாக உயர்ந்துள்ளது.
இதேபோல் கோதுமை மாவு(ஆட்டா) விலையும் கடந்தாண்டு சராசரியாக 30ரூபாய்04பைசா ஆக இருந்தது. இந்த விலை தற்போது 17விழுக்காடு உயர்ந்து 35ரூபாய் 17 பைசாவாக அதிகரித்துள்ளது
ஏற்கனவே இந்தியாவில் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் விலை உள்நாட்டில் உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இந்த சூழலில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை பொருட்கள் ஏற்றுமதி செய்வது தடுக்கப்பட்டால் மேலும் விலை குறைய வாய்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.