பெட்ரோல் விலையை குறைப்பிங்களா!!!? இல்லையா!!!?
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பாரத ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணத்தை செய்து வருகிறார். தினசரி சுமார் 25 கிலோமீட்டர் வரை நடக்கும் ராகுல்காந்தி, பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து அவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு மக்களின் மனங்களை கவர்ந்து வருகிறார். இதனை மத்தியில் ஆளும் பாஜக அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் கேலி செய்து வருகின்றனர். இது மக்களை ஏமாற்றும் தந்திரம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கேலி பேசியுள்ளார். அதற்கு பதிலடி தரும்வகையில் ராகுல்காந்தி அண்மையில் கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வரும்போதும்கூட மத்தியில் ஆளும் ஆட்சி விலையை பொதுமக்களுக்காக குறைக்கவில்லை என்றும் இது கொள்ளையடிக்கும் தந்திரம் என்றும் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் முன்பு இருந்ததை விட கச்சா எண்ணெய் விலை 25%, சமையல்எரிவாயு விலை 40% குறைந்துள்ள போதிலும் ஏன் இவற்றின் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை என்றும் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சாடியுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி , பிரதமர் நரேந்திர மோடியோ, மக்களிடம் இருந்து பணத்தை வரியாக எப்படி வசூலிப்பது என்பதிலேயே தீவிரம் காட்டி வருவதாக தெரிவித்தார்.