இதனால், ஐபோன் விலை அதிகரிக்குமா?
உலகின் மதிப்புமிக்க பிராண்டாக பார்க்கப்படும் ஆப்பிளின் ஐபோன் உற்பத்தி முன்பு கணித்ததைவிட குறைய அதிக வாய்ப்பிருப்பதாக UBS நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகிலேயே பெரிய ஐபோன் ஆலையை கொண்டுள்ள சீனாவில்,அண்மையில் நிலவிய கொரோனா கட்டுப்பாடுகள் சூழல் காரணமாக உற்பத்தி கணிசமாக குறைந்தது. யுபிஎஸ் அறிக்கையின்படி முன்பு திட்டமிடப்பட்டிருந்த 14 மாடல் செல்போன்களின் உற்பத்தி 1 கோடியே 60 லட்சம் செல்போன்கள் குறைய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடிப்படை மாடலான 14 ரக செல்போன்கள் உற்பத்தி சீனாவில் நிலவும் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது முதலில் 9 கோடியே 20 லட்சம் செல்போன்கள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு தற்போது வெறும் 7 கோடியே 60 லட்சம் செல்போன்கள் மட்டும் நடப்பு காலாண்டில் உற்பத்தி ஆகும் என கூறப்படுகிறது. இந்த அளவு கடந்தாண்டை விட 20% குறைவாகும். சீனாவின் செங்க்சவ் வளாகத்தில் பணியாளர்கள் ஐபோன் உற்பத்தி செய்ய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக பாதியிலேயே பணியை விட்டு ஓட்டம் பிடித்துவிட்டதாகவும், இதனால் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், உற்பத்தி பாதிப்பு என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. இதன் காரணமாக அதே ஆலையில் உற்பத்தியாகும் புரோ மற்றும் புரோ மேக்ஸ் ரக செல்போன்களின் உற்பத்தியும் வெகுவாக பாதிக்கப்பட்டு, உலகளவில் வரும் பண்டிகை நாட்களில் இதன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இந்த புரோ ரக செல்போன்களில் 60 லட்சம் செல்போன்கள் குறைவாக உற்பத்தியாவதால் ஆப்பிள் நிறுவன செல்ஃபோன் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். சீனாவை மட்டுமே நம்பியில்லாமல், பெகட்ரான்,லக்ஷேர் நிறுவனங்களிடமும் அடிப்படை மாடலான 14-ஐ உற்பத்தி செய்யும்படி ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளதால் உற்பத்தி சரி செய்யப்பட் அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.