“பங்குச்சந்தைகள் ஓவரா மதிப்பிட்டு இருக்காங்க பாஸ்”
ஜீரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத் அண்மையில் பங்குச்சந்தையில் நிலவும் ஏற்றத்தாழ்வு குறித்து தனது கருத்தை முன் வைத்துள்ளார். அதன்படி, புதிய தொழில்நுட்பங்கள் சார்ந்த பங்குகளில் அதிக முதலீடுகள் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். தகவல் தொழில்நுட்பம்,மருந்துத்துறை மற்றும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் துறை பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ள அவர் தற்போதுள்ள பங்குச்சந்தை அதிகம் மதிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். உலகளாவிய பொருளாதார சூழல் குறித்து அவரிடம் எழப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள நிகில், உலகளவில் நிலையற்ற தன்மையே நிலவுதாகவும், வளர்ச்சி வரும் என்று நம்பவும் முடியாமல், பொருளாதார மந்த நிலை உள்ளது என்பதை ஏற்கவும் முடியாத சூழலே நிலவுவதாக தெரிவித்தார். பொருளாதார மந்த நிலை இந்தியாவுக்கு வரும் என்று தாம் நம்பவில்லை என்று கூறியுள்ள அவர், அதே நேரம் விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டால் மந்தநிலைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். இதே நிறுவனத்தைச் சேர்ந்த ரிச்சர்டு என்பவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதிலில் இந்திய பங்குச்சந்தைகள் உலகளவில் மிகச்சிறப்பாக செயல்பட்டு இருப்பதாகவும் பெரிய நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சீனாவை தவிர்த்துவிட்டு இந்தியா பக்கம் தங்கள் கவனத்தை திருப்புவதாகவும் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.