பொம்மை செய்தால் ஊக்கத்தொகை!!!!
இந்தியாவில் பொம்மைகள் தயாரிப்பை ஊக்கப்படுத்த மத்திய அரசு அண்மையில் சிறப்பு சலுகைகளையும், விற்பனை கண்காட்சியையும் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பான BIS சான்றளிக்கும் தரத்தில் பொம்மைகள் உருவாக்கப்படும் பட்சத்தில் அதற்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. அதாவது இந்திய தரத்தில் பொம்மைகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையாக 3 ஆயிரத்து 500 கோடி ரூபாயை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை கொண்டு செய்யப்படும் பொம்மைகளை இந்த சலுகையில் சேர்ப்பதா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. எனினும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் பொம்மைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட இருக்கிறது. இந்தியாவில் பொம்மைகள் உற்பத்தியை அதிகப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் கொண்டுவருவதால் முதலீட்டாளர்கள் மேலும் அதிகரிப்பார்கள் என்றும் அரசுத்துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 25 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரையில் உள்ள முதலீடுகளும், 100முதல் 200 கோடி முதலீட்டில் செய்யப்படும் பொம்மைகளின் நிறுவனங்களுக்கு இந்த சலுகை கிடைக்க அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 14 துறைகளில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பிஎல்ஐ எனப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் காலங்களில் பொம்மைகள்,காலணிகள்,சைக்கிள்,மருந்துப்பொருட்கள் உற்பத்திக்கும் பிஎல்ஐ அளிக்கப்படும் என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.