2008-க்கு பிறகு இந்தாண்டுதான் மோசம்!!!!
பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்தும் மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் பிற துறைகளைவிட துவக்கசம்பளமே 1 லட்சம் ரூபாய் என வாங்கிய ஐடி நிறுவன ஊழியர்களால் இந்தியாவில் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு துறைகள் அசுர வளர்ச்சி கண்டுள்ளது என்றால் அது மிகையல்ல.. நிலைமை இப்படி இருக்க கடந்த 2008ம் ஆண்டில் நிலவிய பொருளாதார மந்த நிலை காரணமாக பல தொழில்நுட்ப நிறுவனங்கள் திவாலாகி பெரிய பாதிப்பை சந்தித்தன. அதன் பாதிப்பில் இருந்து இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இப்போதுதான் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன. இந்த சூழலில் 2022ம் ஆண்டில் மட்டும் இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகளின் மதிப்பு 24% வீழ்ச்சி கண்டுள்ளது. முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான விப்ரோ, டிசிஎஸ் இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் இந்த ஓராண்டில் மட்டும் 12 முதல் 45 % சரிந்து அதிர வைத்துள்ளது. உலகளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக , மேற்கத்திய நாடுகளில் தொய்வு காணப்படுகிறது. 90 %ஏற்றுமதி செய்யும் மென்பொருட்கள் மேற்கத்திய நாடுகளை நம்பியே இருப்பதால் வரும் ஆண்டுகள், பெரிய அளவில் சரிவு இருக்குமென சில ஆய்வு நிறுவனங்கள் எச்சரிக்கின்றன. 2008ம் ஆண்டுக்கு பிறகு மிகக்குறைவாக 12 % சரிவை சந்தித்த நிறுவனம் என்ற பெருமையை டிசிஎஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 45%சரிவை சந்தித்த விப்ரோ நிறுவனம் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நிறுவனம் என்ற மோசமான சாதனையை கொண்டுள்ளது. அமெரிக்க பங்குச்சந்தைகளில் நிலவும் சூழலை பொறுத்தே இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் எதிர்காலம் இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.