நம்ம மஸ்குக்கு என்னதான் ஆச்சு!!!!
எத்தனை முறை விழுந்தாலும் அபார வளர்ச்சியை மட்டுமே இலக்காக கொண்டு பறக்கும் முரட்டு,முட்டாள் தொழிலதிபர் என விமர்சனங்களை கொண்டவர் எலான் மஸ்க்,… அண்மையில் தெரியாமல் டிவிட்டரை வாங்கினாலும் வாங்கினார், சூரியன்,சந்திரன் போல இவரின் செய்தியும் தவறாமல் வந்துவிடுகிறது. திருமண பந்தத்துக்கு மீறி வேறொரு துணையுடன் தொடர்பில் இருப்பது போல டிவிட்டர் மீது அத்தனை மோகம் கொண்டுள்ள மஸ்க்,முதல் மனைவியான டெஸ்லா (சிரிக்க மட்டுமே)வை கண்டுகொள்வதே இல்லை என்று கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. உலகிலேயே தனித்துவமான டெஸ்லா கார்கள் இன்றளவும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 137 டாலராக வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துக்கு பிறகு டெஸ்லா நிறுவன பங்குகள் கடுமையாக வீழ்ந்துள்ளன.அதாவது 60% குறைந்துள்ளன. வித்தியாசமான அனுகுமுறை கொண்ட எலான் மஸ்க்கிடம் ஏன் உங்கள் நிறுவன பங்குகள் சரிந்துவிட்டன என்று கேட்டவர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி,அதற்கும் அந்த மனிதர் நூதன பதிலைத்தான் சொல்லியிருக்கிறார். அதாவது மக்கள் கைகளில் பணம் இல்லை, இருந்ததை எல்லாம் எடுத்துவிட்டார்கள் அப்புறம் எப்படி என் டெஸ்லா நிறுவனத்தில் முதிலீடு செய்வார்கள் என்று யதார்த்தமாக பதிலளித்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
ஊர் உலகமே அவரை திட்டித் தீர்த்தாலும்..,அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டிகளை உயர்த்தியதால்தான் தனது நிறுவனங்களுக்கு பாதிப்பு என்று கூறி அதிர வைத்துள்ளார் எலான் மஸ்க், இவ்வளவு ரணகளத்திலும், டெஸ்லா நிறுவனம் முன்பு எப்போதும் இல்லாத அளவில் நிறுவனம் சிறப்பாக செயல்படுவதாக அவர் பேசியுள்ளது முதலீட்டாளர்களை எரிச்சலடைய வைத்துள்ளது.