பழைய கார்களுக்கு வருகிறது புதிய விதி!!!
கார்கள், பைக்குகளை முதல்முறை ரொக்கப்பணம் கொடுத்துதான் வாங்கவேண்டும் என்ற நிலை பரவலாக மாறியுள்ளது. பலரும் ஏற்கனவே பயன்படுத்திய கார்களை வாங்கவே ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை உறுதிபடுத்தும்வகையில் புள்ளிவிவரங்களும் உள்ளன. இதுவரை எந்த ஒரு சட்ட திட்டங்களும் பழைய கார்கள்,பைக்குகள் விற்பனைக்கு இல்லாத நிலையில், அதனை முறைப்படுத்த மத்திய அரசு வரைவு அறிக்கையை தயாரித்துள்ளது. ஆன்லைனில் ஏராளமானோர் பழைய கார்களை விற்பனை செய்து வருவதால் மக்களுக்கு யாரை நம்புவது என்பதே புரியாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் சாலை போக்குவரத்து சட்டம் 1989-ஐ மாற்றி அதற்கு பதிலாக புதிய விதிகளை வகுக்க இருக்கிறது. இதன்படி இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற பழைய கார் விற்பனையாளரா என்ற சான்று அவசியமாகிறது. அதாவது ஒரு நபரிடம் இருந்து பழைய கார்களை வாங்கும் முகவர்கள், தங்கள் பெயர்களுக்கு அந்த காரின் உரிமையை மாற்றிக்கொண்டு பின்னர் அதை வேறொருவருக்கு விற்கவேண்டும் என்றும் அந்த புதிய விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்சார பேட்டரிகளில் இயங்கும் வாகனங்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மோசடிகளை தடுக்கவே புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சரவை தெரிவித்துள்ளது.