“பங்குச்சந்தை கோமாளித்தனத்தை பத்தி கவலைப்படாதீங்க…வேலைய பாருங்க..”
ஒரு விஷயம் தேவை என தீர்மானித்த பிறகு, அடம்பிடித்து,இலக்கை நோக்கி சென்று வேடிக்கை காட்டி ஜெயிப்பது பிரபல தொழிலதிபர் எலான் மஸ்கின் தனித் திறமையாகும். அவர் வித்தியாசமான முயற்சிகள் செய்தபோது கேலி செய்த பலரும் பின்னர் அவர் நிறுவனத்திலேயே முதலீடு செய்த சம்பவங்கள் இருக்கத்தான் செய்தது. இந்த நிலையில் அண்மை காலமாக டெஸ்லா நிறுவனத்தின் பக்கம் தலைவைத்து படுக்காத எலான் மஸ்க், அந்த நிறுவன பங்குகள் 70% விழுந்ததை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். பூமியிலேயே மிகச்சிறந்த படைப்பு தன்னுடைய டெஸ்லா கார்தான் என்று கூறியுள்ள எலான் மஸ்க், தற்போது நிலவும் பங்குச்சந்தை சரிவு பற்றி அதன் ஊழியர்கள் கவலைப்பட வேண்டாம் என்று நம்பிக்கை ஊட்டியுள்ளார். தனது நிறுவன ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ள எலான் மஸ்க், அமெரிக்காவில் டெஸ்லா கார்களுக்கு சலுகை அளித்துள்ளதால் அதில் கவனம் செலுத்தி கார்களை விரைந்து உற்பத்தி செய்து அனுப்பும்படி மஸ்க் கேட்டுக்கொண்டுள்ளார். மிகச்சிறந்த படைப்பு என அதீத நம்பிக்கையில் உள்ள எலான் மஸ்க், அண்மையில் தனது ஊழியர்களுக்கும் சம்பளத்துக்கு பதிலாக பங்குகளை அளித்து அதிர வைத்தது குறிப்பிடத்தக்கது. டிவிட்டர் நிறுவனத்தை பெரும்தொகை கொடுத்து வாங்கிய எலான் மஸ்க், அதனை எப்படியாவது லாபகரமாக்க வேண்டும் என்று படாதபாடுபட்டு வருகிறார். அதேநேரம் இதற்கு முன்பு ராப்பகலாக வேலைபார்த்து உருவாக்கிய டெஸ்லாவை மேம்படுத்த அவர் தவறிவிட்டதாக முதலீட்டாளர்கள் புகார் முன்வைக்கின்றனர்.