ஐயா அத கொஞ்சம் பாத்து முடிச்சி விடுங்க…!!!
கடுமையான நிதிச்சுமையில் சிக்கித்தவிக்கும் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தை மீட்டெடுக்க அந்த நிறுவனம் படாதபாடுபட்டு வருகிறது. வோடஃபோன் நிறுவனத்துடன் சம பங்குதாரராக உள்ள ஐடியா நிறுவனம் ஆதித்யா பிர்லா குழுமத்துக்கு சொந்தமானது. வோடஃபோனுக்கு இழப்பு என்றால் அது தங்களுக்கும் இழப்புதான் என்பதால்,அதில் உள்ள சிக்கல்களை களைய ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார்மங்களம் பிர்லா,அண்மையில் தொலைதொடர்புத்துறை மந்திரியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, வோடஃபோன் ஐடியா நிறுவனம் செலுத்த வேண்டிய தொகையை அரசே பங்குகளாக விரைந்து வெளியிட வேண்டும் என்றும், அலைக்கற்றை ஏலத்தில் கடன் தொகையை செலுத்துவது குறித்து சலுகைகள் வழங்க கோரியதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை பிர்லா சந்தித்து பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்ததாக தெரிகிறது. அலைக்கற்றைக்கு தேவையான லைசன்ஸ் கட்டணம் குறித்து பேசியதாாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எத்தனை பெரிய நிதி சிக்கல் வந்தாலும் வோடஃபோன் நிறுவனம் இந்திய சந்தையை விட்டு ஓட்டம் பிடிக்காமல் தாக்குபிடித்து வருவது அந்நிறுவனத்தில் முதலீடு செய்ய விரும்பவோரை நம்பிக்கை கொள்ள வைத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல..