ரொம்ப அவசரம் ஒரு 7000 கோடி கடன் கொடுங்க!!!!
பக் வகை நாய்க்குட்டிகளை வைத்து விளம்பரம் செய்த வோடஃபோன் நிறுவனத்தை, தற்போது கடன் தொல்லை அந்த செல்லப்பிரானி போல விடாமல் துரத்தி வருகிறது. பல கோடி வாடிக்கையாளர்கள் மாற்று நிறுவனங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டதாலும், அதீத கடன் சுமையாலும் வோடஃபோன் ஐடியா நிறுவனம் தவியாய் தவிக்கிறது.
சேவைகளை அளித்து வரும் இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்துக்கு போதிய பணம் தர முடியாமலும் வோடஃபோன் நிறுவனம் திணறி வருகிறது. இந்த சூழலில் முன்னணி வங்கிகளின் படிகளை வோடஃபோன் நிறுவனம் மிதிக்கத் துவங்கியுள்ளது. ஒன்று இரண்டல்ல, 7 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக கேட்டதும் வங்கிகளே அதிர்ந்து போயுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 15 ஆயி்ரம் கோடி ரூபாய்க்கு சொத்து மதிப்புகளை காட்டும் வோடஃபோன் நிறுவனத்துக்கு பாதிக்கு பாதி கூட கடன் தர வங்கிகள் முன்வர மறுக்கின்றன. பெரிய தொகையை கடனாக வைத்துள்ள வோடஃபோன் நிறுவனம், இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்துக்கு மட்டும் 7 ஆயிரம் கோடி ரூபாயை தர வேண்டியுள்ளது. மாதந்தோறும் டவர்கள் வாடகைக்கு மட்டும் 300 கோடி ரூபாய் வோடஃபோன் நிறுவனம் தர வேண்டியுள்ளது. கொடுக்க வேண்டிய தொகை உயர்ந்து கொண்டே செல்வதால் டவர்களில் சேவை வழங்குவதை நிறுத்தப்போவதாக இண்டஸ் டவர்ஸ் நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில், திரிசங்கு நிலைக்கு வோடஃபோன் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாத கணக்குப்படி 75 ஆயிரத்து 830 கோடி ரூபாய் நெகட்டிவ் சொத்துமதிப்பு வைத்துள்ள நிறுவனமாக வோடஃபோன் நிறுவனம் உள்ளது. நெகட்டிவ் சொத்துமதிப்பு உள்ள எந்த நிறுவனத்துக்கும் வங்கிகள் கடன் தருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொடுத்த கடன் திரும்ப வரும் என்ற எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் வங்கிகள் கடன் தருவதில்லை என்பதே நிதர்சனமாக உள்ளது.