தாலிபான்களுடன் கைகோர்த்துள்ள சீனா!!!
ஆஃப்கானிஸ்தானில் அண்மையில் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய தாலிபான்கள், தங்கள் தேசத்தில் உள்ள எண்ணெய் வளங்களை வெளியில் எடுக்க சீனாவின் உதவியை நாடியுள்ளது. அங்குள்ள அமுதர்யா பேசின் என்ற பகுதியில் எண்ணெய் வளங்களை எடுக்கவும், காபூல் நகரில் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இந்த முயற்சியை செய்துள்ளதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான ஒப்பந்தத்தில் சீனா மற்றும் தாலிபான் அரசுகள் கையெழுத்திட்டுள்ளனர். 540 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளதாக இருநாட்டு அரசுகளும் தெரிவித்துள்ளன. 10 முதல் 20 ஆயிரம் டன் அளவுக்கு குறிப்பிட்ட 3 பகுதிகளில் கச்சா எண்ணெய் எடுக்க தாலிபான் அரசு திட்டமிட்டுள்ளது. கச்சா எண்ணெய் எடுப்பதற்காக 25 ஆண்டுகள் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் எண்ணெய் எடுக்க சீன நிறுவனம் முதலில் 150 மில்லியன் டாலரும் பின்னர் மொத்தமாக 540 மில்லியன் டாலரும் முதலீடு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆப்கானிஸ்தானியர்கள் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. உலகின் எந்த நாடுகளும் தாலிபான் அரசை அங்கீகரிக்காமல் இருந்து வந்த சூழலில் அவர்களுடன் முதல் நாடாக சீனா கைகோர்த்துள்ளது. பெண்களுக்கு பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் சூழலில் பல்வேறு சலுகைகளை ஐக்கிய நாடுகள் சபை ஆப்கானிஸ்தானுக்கு மறுத்துள்ளது.