அமெரிக்கா போக இனி கூடுதல் செலவுபிடிக்கும்.. ஏன் தெரியுமா…??
வெளிநாடுகளுக்கு வேலைக்காக குறிப்பாக அமெரிக்காவுக்கு H1B விசாவில் வேலைக்கு சேர்வதற்கு இளைஞர்கள் மத்தியில் நிலவும் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த சூழலில் அமெரிக்காவில் ஆளும் பைடன் தலைமையிலான அரசாங்கம் விசாவுக்கான கட்டணத்தை அதிகளவில் உயர்த்த திட்டமிட்டுள்ளது. H1B வகை விசாவுக்கு ஏற்கனவே உள்ள கட்டணத்தை விடவும் 2050 % உயர்த்த அதாவது 10 டாலராக இருந்த கட்டணத்தை 215 டாலராக அமெரிக்கா உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதேபோல் H1 வகை விசாக்களுக்கு வகையில் சில விசாக்களின் கட்டணம் 460 டாலரி்ல் இருந்து 780 டாலராக உயர்கிறது. இரு நிறுவனங்களுக்கு இடையேயான மாற்றம் தொடர்பான எல் வகை விசாவுக்கு 201% விசாகட்டணம் எகிறுகிறது.அதாவது 460 டாலராக இருந்த கட்டணம் இனி ஆயிரத்து 385 டாலராக உயர்கிறது. O வகை பணிகளுக்காக அமெரிக்கா செல்லும் நபர்களுக்கான விசா கட்டணம் 129 விழுக்காடு உயர்கிறது. இதேபோல் அமெரிக்காவில் தொழில் தொடங்க நினைப்போர் மற்றும் முதலீட்டாளர்களுக்கான EB5 வகை விசாவின் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்கிறது. இந்த வகை விசாவுக்கு தற்போது வரை 3,675 டாலர்கள் செலவான நிலையில் இனி இந்த தொகை 11 ஆயிரத்து160 டாலராக உயர்கிறது. இது 204% அதிகமாகும். அனைத்து வகை விசாக்களையும் செயல்படுத்தும் கட்டணம் அதே 2 ஆயிரத்து 500 டாலராக உள்ளது. அமெரிக்காவுக்கு வந்து இறங்குபவர்களின் விவரங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் அமைப்பாக உள்ள USCIS அமைப்பு இதுபற்றி கூறியுள்ள கருத்தில், கடந்த 2020ம் ஆண்டு வரை ஓரளவுக்கு நிதி வைத்திருந்த தங்கள் அமைப்பு, பிற சேவைகளுக்கு கூட பயன்படுத்த முடியாத அளவுக்கு நிதி நெருக்கடிக்கு ஆளானதாக குறிப்பிட்டுள்ளது. தற்போதைய புதிய கட்டணங்கள் தவிர்க்க முடியாததாக உள்ளது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் தங்கி வேலை செய்ய அனுமதிக்கும் H1B வகை விசா சராசரியாக 85 ஆயிரம் பேருக்கு மட்டுமே கிடைக்கும் என்பதால் அதற்கு எப்போதுமே ஒரு மவுசு இருக்கத்தான் செய்கிறது. 85 ஆயிரம் பேரில் 75% இந்தியர்களே ஆக்கிரமித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்த அம்சமாகும்.