அனில் அம்பானிக்கு இடைக்கால தீர்ப்பு
ஸ்விஸ் வங்கிகளில் இரண்டு கணக்குகளில் 814 கோடி ரூபாய் நிதி உள்ளது பற்றியும், 420 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் பிரபல தொழிலதிபர் அனில் அம்பானிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இது தொடர்பான வழக்கு திங்கட்கிழமை மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது வருமான வரித்துறை சார்பில் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் அனில் அம்பானி மீது முன்வைக்கப்பட்டது. கருப்புப்பணம் தொடர்பான சட்டப்படி அனில் அம்பானிக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. மேலும் வேண்டுமென்றே வெளிநாட்டு சொத்துகள் ,வங்கி விவரங்களை அனில் அம்பானி கணக்கில் காட்டவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் வாதத்தை முன்வைத்த அனில் அம்பானி தரப்பு, கருப்புப்பணம் தொடர்பான சட்டமே 2015ம் ஆண்டு இயற்றப்பட்டது என்றும், வருமான வரித்துறை முன்வைக்கும் தொகை 2006-2007ம் ஆண்டுகளைச் சேர்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிமன்றம் வருமான வரித்துறைக்கு தங்கள் காட்டமான பதிலை தெரிவித்துவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 20ம் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன் அடுத்த விசாரணை வரை அனில் அம்பானி மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது. ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த அனில் அம்பானி, பெரும் கடனாளியாகி, திவால் நோட்டீஸ்களை எதிர்கொண்டுவந்திருந்தார். தற்போது அவரை வழக்குகள் விடாமல் தொடர்ந்து வருகின்றது.