சரிவில் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள்
திங்கட்கிழமை அபார வளர்ச்சி கண்ட இந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை கடுமையாக வீழ்ந்தன. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 631 புள்ளிகள் சரிந்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 187 புள்ளிகள் சரிந்தன. உலகளவில் பங்குச்சந்தைகளில் நிலவும் சாதகமற்ற சூழலால் இந்திய சந்தைகளிலும் சரிவு காணப்பட்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்றதால் இந்திய சந்தைகளில் ஆட்டம் காணப்பட்டது. ஜனவரி மாதத்தில் முதல் 10 நாட்களில் மட்டும் 8 ஆயிரத்து 548 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர். அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் வங்கி மீண்டும் கடன்களுக்கான வட்டித் தொகையை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவல்களால் முதலீட்டாளர்கள் சந்தையில் போட்ட பணத்தை எடுப்பதிலேயே குறியாக இருந்தனர். அதானி குழும பங்குகள் விலை 5% வரை சரிந்துள்ளன பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் மிக மிக மோசமாக 2% அளவுக்கு சரிவை சந்தித்துள்ளன.