சரிவு ஒரு பக்கம், நஷ்டம் ஒரு பக்கம் இதுக்கு நடுவுல இதுவேறயா….
உலகளவில் ஒரு காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த செல்போன் சிம்கார்டு நிறுவனங்களில் வோடஃபோன் நிறுவனமும் ஒன்று, இந்த நிறுவனம் தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. வங்கிகளில் சென்று கடன் கேட்டாலும் யாரும் தர மறுக்கும் சூழல் நிலவுகிறது. நிலைமை இப்படி இருக்க மாதந்தோறும் பெரியளவு சந்தாதாரர்களை அந்நிறுவனம் இழந்து வருகிறது. விற்பனையிலும் பெரிய லாபம் இல்லாதநிலையில், பழைய பணியாளர்களுக்கும் பெரிய சம்பளம் தரமுடியாமல் அந்நிறுவனம் தவித்து வருகிறது. நிலைமை இப்படி இருக்க, அந்த நிறுவனத்தில் பணியில் இருந்த 20விழுக்காடு பணியாளர்கள் வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. அதற்கு மாற்றாக புதிய ஆட்களை தேர்வு செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. விற்பனை பிரிவில் புதிதாக 986 காலிபணியிடங்களை நிரப்ப அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மார்ச் 31ம் தேதி கடந்தாண்டு நிலவரப்படி வோடஃபோன் நிறுவனத்தில் நிரந்தர பணியாளர்களின் அளவு 35% ஆக உள்ளது. 2019-ல் 13,520 ஆக இருந்த நிரந்தர பணியாளர்களின் அளவு 2022-ல் 8 ஆயிரத்து 760 ஆக சரிந்துள்ளது. இதில் பெண் ஊழியர்களின் அளவும் அதிகமாக உள்ளது. டெல்லி மற்றும் சுற்று வட்டாரங்களில் சிறப்பு சலுகைகளையும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. நிதி நிலையை சீரமைக்க 25 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் அந்நிறுவனத்தை ஆசுவாசப்படுத்த அரசு சிறப்பு சலுகைகள் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடனுக்கு பதிலாக பங்குகளாக மாற்றவும் அரசு திட்டம் தீட்டியுள்ளது. கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் அந்த நிறுவனத்தின் நஷ்டம் மட்டும் 7ஆயிரத்து595 கோடி ரூபாயாக மதிப்பிடிப்பட்டுள்ளது.