விப்ரோவில் இப்படி பண்ணது நியாயமா?
தொழில்நுட்ப நிறுவனங்களில் மிகப் பிரபலமானதாக உள்ளது விப்ரோ நிறுவனம். இந்த நிறுவனத்தின் இந்திய அலுவலகங்களில் புதிதாக பணியில் சேர்க்கப்பட்ட 452 பேரை, நிறுவனம் வேலையைவிட்டு நீக்கியுள்ளது. இவர்களுக்கு நிறுவனத்திற்குள் நடத்தப்பட்ட தேர்வுகளில் குறைவான அளவே அவர்கள் மதிப்பெண் பெற்றதால் அவர்களுக்கு பணி இழப்பு நேரிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட 452 பேரும் மத்திய தொழிலாளர் அமைச்சகத்தில் புகார் தெரிவிக்க இருக்கின்றனர். பணிக்கு புதிய ஆட்களை எடுத்துவிட்டு அவர்களை திடீரென வேலையை விட்டு நீக்குவதற்கு NITES என்ற அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட இந்த அமைப்பில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். நேர்காணல்,பயிற்சி என மாதக்கணக்கில் அலைக்கழிக்கப்பட்டு ஒற்றை ரூபாய் கூட பணம் தராமல் புதிய பணியாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் இது அழகல்ல என்றும் NITES அமைப்பு கண்டித்துள்ளது. 30 நாட்களுக்கு முன்பே தெரிவிக்காமல் யாரையும் பணிநீக்கம் செய்ய முடியாது என்று கூறியுள்ள NITES அமைப்பு, இது தொடர்பாக அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது.