அமெரிக்காவில் வேலை போன இந்தியர்கள் தவிப்பு
அமெரிக்காவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை இழப்பு அதிகரித்து வருகிறது. அடித்துப்பிடித்து அமெரிக்காவில் தங்கி வேலை செய்யும் விசாவை வாங்கிய இந்தியர்களில் பெரும்பாலானோருக்கு தற்போது வேலை இல்லை. அவர்களுக்கு 60 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குள் அவர்கள் வேறு நிறுவனங்களில் சேர்ந்தாக வேண்டும் இல்லாதபட்சத்தில் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர். வாஷிங்க்டன் போஸ்ட் நிறுவன தரவுகளின்படி கடந்த நவம்பரில் இருந்து இதுவரை அமெரிக்காவில் மட்டும் 2 லட்சம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த 2 லட்சத்தில் 40 விழுக்காடு எச்1பி விசா மற்றும் L1விசா வாங்கிய பணியாளர்கள் ஆவர். இந்தியா மற்றும் சீனாவில் இருந்துதான் அதிகப்படியான எச்1பி விசா பணியாளர்கள் செல்கின்றனர். அமெரிக்காவில் தங்கி வேலை செய்யும் இந்தியர்களுக்கு திடீரென வேலை போவதால் அவர்களின் குடும்பங்களும், குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படுகிறது. நிலைமை இப்படி இருக்க கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு கிரீன் கார்ட் எனப்படும் நிரந்தர குடியிருப்பு அட்டை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.