இந்தியாவில் ஆப்பிள் செல்போன்கள் நிகழ்த்தியுள்ள அதிரடி :
உலகின் பிரபல நிறுவனங்களின் பட்டியலில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கும் நிறுவனம் என்றால் அதில் ஆப்பிளுக்கு நிச்சயம் ஒரு இடம் எப்போதுமே உண்டு. நிலைமை இப்படி இருக்க இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் கடந்த மாதம் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது தெரியுமா? ஆமாம் எக்னாமிக் டைம்ஸ் நிறுவன தரவுகளின்படி 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ரக செல்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மொத்த ஏற்றுமதி அளவு 10ஆயிரம் கோடி ரூபாயை தொட்டிருக்கும் என்கிறது மற்றொரு வட்டாரம். சீனாவில் நிலவும் நிலையற்ற சூழல் காரணமாக அங்கிருந்து ஐபோன் உற்பத்தியை இந்தியா பக்கம் திருப்பியதே இந்த சாதனைக்கு காரணமாக கூறப்படுகிறது. ஐ போன்களின் மாடல்களான 11 முதல் 14 வரை இந்தியாவில் ,அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் இருந்துதான் அதிக ஐபோன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. விஸ்ட்ரான், பெகட்ரான் மற்றும் ஃபாக்ஸ்கான் ஆகிய 3 நிறுவனங்களில் மட்டுமே இத்தகைய செல்போன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2022-ம் நிதியாண்டை ஒப்பிடுகையில் 2023-ம் நிதியாண்டில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் செல்போன்களின் விகிதம் 5.8பில்லியனில் இருந்து 9 பில்லியன் டாலராக உயரும் என்று அரசு கணித்துள்ளது. சீனாவுக்கு பதிலாக இந்தியாவில் 14 பகுதியில் உற்பத்தியை மாற்ற அமெரிக்கா இசைவு தெரிவித்து வருகிறது. உலகில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களில் 2-ல் ஒன்று வரும் 2027-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் 5%க்கும் குறைவாகவே ஐபோன்கள் அசெம்பிள் செய்யப்படுகிறது. ஜேபி மார்கன் நிறுவன கணிப்புப்படி, இந்தியாவில் வரும் 2025-ம் ஆண்டுக்குள் இந்த அளவு 25%ஆக உயரும் என்று நம்பப்படுகிறது.