ரஷ்ய எண்ணெய் பிடிச்சிருக்கு..,நிறைய குடுங்க…!!!
உலகத்திலேயே எங்கு குறைவான விலையில் கச்சா எண்ணெய் கிடைக்கும் என்று வலைவீசி தேடி வருவதில் இந்தியா கில்லாடியாக உள்ளது. இந்த நிலையில் உக்ரைன்-ரஷ்யா போரால் ரஷ்ய கச்சா எண்ணெய் விலை குறைவாக கிடைத்ததை இந்தியா சரியான நேரத்தில் வாங்கிக் குவித்தது. அடுத்த மாதம் வரை இந்தியாவுக்கு ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெயை வாங்கி அதனை இந்தியாவில் சுத்திகரித்துவிட்டு தடை உள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு விற்கும் ராஜதந்திர முயற்சியில் இந்தியா அதிக சாமர்த்தியமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவிடம் இருந்து மேலும் அதிக கச்சா எண்ணெயை வாங்க இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. மேற்கத்திய நாடுகளை தவிர்த்துவிட்டு இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்குவது சில நாடுகளுக்கு பகையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை 62%அதிகம் வாங்கியுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெய் கடந்த மாதம் மட்டும், ஒரு நாளுக்கு 1 லட்சத்து 37ஆயிரம் பேரல்களாக உயர்ந்துள்ளதாகவும் இந்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.