சோப், சீப் கூட விற்க மாட்டேங்குது!!!! எதாவது செய்யுங்க…
டீவியில், இணையத்தில் பார்க்கும் 10-ல் ஒரு விளம்பரம் ஒன்று சஃபோலா அல்லது பாராசூட் எண்ணெய் விளம்பரம் இருக்கும். அத்தகைய பிரபல நிறுவனமாக உள்ளது மேரிக்கோ நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் சவுகத்தா குப்தா. இவர் அண்மையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பொதுமக்கள் தங்கள் நிறுவன பொருட்களை வாங்குவதை குறைத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதுவும் குறிப்பாக கிராமபுற பகுதிகளில் விற்பனை சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போருக்கு பிறகு பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து, விலைவாசி உயர்ந்துள்ளதாக கூறியுள்ள சவுகத்தா குப்தா, எப்போதெல்லாம் விலைவாசி உயர்வு அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் சந்தையில் மக்கள் அன்றாடம் விற்கப்படும் பொருட்களின் விற்பனை சரிகிறது. இதன் காரணமாகத்தான் கடந்தாண்டில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விற்பனை ஒற்றை இலக்க வளர்ச்சி பெற்றுள்ளதாக கூறியுள்ளார். மற்ற நாடுகளைவிட இந்தியாவில் பணவீக்கத்தை மக்கள் சிறப்பாக எதிர்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் உள்ள மக்களுக்கு வருமான வரியில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ள அவர், இதனால் மக்களின் கைகளில் அதிக பணம் புழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
விலைவாசி உயர்வு காரணமாக கிராமபுறங்களில் மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்க வேண்டியுள்ளதாக கூறியுள்ள குப்தா,மானியம் அளிப்பது குறுகிய கால பலன்களை மட்டும் தரும் என்றும்,உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை அளிப்பதுதான் மக்களுக்கு சிறந்த பலனை தரும் என்று குப்தா தெரிவித்துள்ளார்.