“இன்னும் ஏன் மியூட் மோட்ல இருக்கீங்க மேடம்..??.”
பல ஆண்டுகளாக சிறிது சிறிதாக வளர்ந்து வந்ததாக கூறப்படும் அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் பல அதிர்ச்சி குற்றச்சாட்டுகளை கூறியதன் விளைவு, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இருந்து அதானி பல இடங்கள் சறுக்கல்,முதலீட்டாளர்களுக்கு பெரிய நஷ்டம் என அடுக்கடுக்கான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக இந்தியாவின் இரண்டு மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களான எல்ஐசி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை அதானி குழுமத்தில் பெரிய தொகையை முதலீடு செய்துள்ளன. இந்த இரு நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பும் சுமார் 78 ஆயிரம் கோடி ரூபாய் சரிந்தது. இது பற்றி கேள்வி எழுப்பியுள்ள காங்கிரசின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, எல்ஐசி என்பது பொதுமக்களின் பணம், 77 ஆயிரம் கோடி ரூபாயை அதானி குழுமத்தில் முதலீடு செய்த எல்ஐசிக்கு தற்போது வரை 23,500 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும், இதேபோல் பாரத ஸ்டேட் வங்கியின் சந்தை மூலதனமும் 54 ஆயிரத்து 618 கோடி சரிந்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். எஸ்பிஐ நிறுவன ஊழியர்களுக்கு வழங்க இருந்த பணத்தையும் எடுத்து ஏன் அதானி குழுமத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் ரன்தீப் சிங் கேட்டுள்ளார். இத்தனை பெரிய சம்பவங்கள் நடந்த பிறகும் ரிசர்வ் வங்கி,செபி,சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவையும் நிதி அமைச்சரும் மியூட் மோடிலேயே இருப்பது ஏன் என்றும் ரன்தீப் கேட்டுள்ளார். ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழுமம் பெரிய தொகையை பங்குச்சந்தைகளில் இழந்து வரும் சூழலில், அந்த அறிக்கை அடிப்படை அற்றது என்று அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது. FPO வெளியீட்டை காலி செய்யவே, பொய்யான தகவல்களை ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ளதாகவும், அதானி குழுமத்தை அழிக்க நினைத்து போலி பரப்புரை செய்யப்படுவதாகவும் அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது.