பழசை ஒழிக்கவும் – பட்ஜெட்டில் நிதி அமைச்சர்
மத்திய அரசின் பழமையான வாகனங்களை அழிக்க போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நிர்மலா சீதாராமன், பழைய வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களை மாநிலங்கள் மாற்றவும் போதிய ஆதரவு அளிக்கப்படும் என்று உறுதியளித்தார். 5ஜி சேவைகளைப் பயன்படுத்தி செயலிகளை உருவாக்குவதற்காக பொறியியல் கல்வி நிறுவனங்களில் 100 ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. மாற்று எரிசக்தி பயன்பாடு, கார்பன் வாயு வெளியேற்றம் இல்லாத சூழலை ஏற்படுத்துவது, எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றை மேற்கொள்ள முன்னுரிமை மூலதன நிதியுதவியாக 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் மாற்றியமைக்கப்படுவதுடன், 9 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் கூறினார். இது கூடுதலாக 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அடமானமில்லா கடன் பெற வழிவகை செய்யும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கான ஒரு முறை சேமிப்புக்கான திட்டம் தொடங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன்படி, பெண்கள் அல்லது குழந்தைகள் பெயரில் 2 லட்சம் ரூபாய் வரை சேமிக்கும் வசதி ஏற்படுத்தப்படுகிறது. 7.5 சதவீத வட்டியுடன் கூடிய இந்தத் திட்டத்தில், பகுதியளவு தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதியும் இடம்பெற்றுள்ளது.