3-ல் 2 பங்கு பேர் புதிய வரித்திட்டத்திற்கு வந்துடுவாங்க..
மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத் தலைவர் நிதின் குப்தா அண்மையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், வரும் நிதியாண்டில் மட்டும் புதிய வருமான வரி விதிப்படி 50-66 % வரை வரி செலுத்துவோர் புதிய வரித் திட்டத்துக்கு மாறிவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார். எந்த முறைப்படி வரி செலுத்த வேண்டும் என்பதை வரி செலுத்துவோர் வசமே விட்டுவிட்டதாக கூறும் நிதின், 2020ம் ஆண்டே புதிய வருமான வரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டாலும் கூட, 5 லட்சத்தில் இருந்து 7 லட்சம் ரூபாய் வரை வரி சலுகை கிடைக்கும் என்ற புதிய அறிவிப்பால் மக்கள் கண்டிப்பாக புதிய முறைக்கு மாறுவார்கள் என்றும் தெரிவித்தார். மாத சம்பளம் பெறுவோர் மட்டுமின்றி, வருவாய் அதிகம் சம்பாதிப்போருக்கு வரி செலுத்தும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும் நிதின் தெரிவித்துள்ளார். புதிய வருமான வரி செலுத்தும் முறையால் நிலையான கழிவாக 50 ஆயிரம் ரூபாய் வரை சலுகை பெற முடியும் என்றும் நிதின் கூறினார்.அதாவது ஒருவருக்கு ஆண்டு வருவாய் ஏழரை லட்சமாக இருந்தாலும் கூட அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் சலுகை போக வரியாக அந்த நபர் எதையும் செலுத்த வேண்டியது இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.