பயப்படாதீங்க… எல்லாம் கட்டுப்பாட்டுல தான் இருக்கு – அம்மையார்
உலகமே உற்று நோக்கிய இந்திய பட்ஜெட்டில் புஸ்க்கென வழக்கம் போல எந்த புதிய அறிவிப்புகளும் இல்லை என்று பல தரப்பிலும் இருந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் ஏதோ சாதனை நிகழ்த்தியதைப் போல நிதியமைச்சரை பல நிறுவனங்கள் பேட்டி எடுத்து வருகின்றன. இந்த சூழலில் பேட்டி ஒன்றில் குறிப்பிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதானி குழுமத்துக்கு வங்கிகள் அளித்த கடன்கள் அனுமதிக்கப்பட்ட சிறிய அளவாகத்தான் உள்ளதாகவும், வங்கி அமைப்புகள் வலுவாகவே இருப்பதாக தெரிவித்தார். வங்கிகளின் நிதி நிலை மற்றும் வாராக்கடன்கள் ஆரோக்கியமாக இருப்பதாக கூறிய நிதியமைச்சர், அண்மையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் சந்தையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். உலக முதலீட்டாளர்களுக்கு இந்திய சந்தைகள் இந்திய அரசு நிலையாக உள்ளது என்பதை உணர்த்தவே பட்ஜெட்டில் பல நல்ல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்தாகவும் நிதியமைச்சர் குறிப்பிட்டார். கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியே ஆகவேண்டும் என்ற சூழலும் அழுத்தமும் தற்போது கணிசமாக குறைந்துள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். புதிய வருமான வரி திட்டத்துக்கு குறைந்தபட்சம் 50% சம்பளம் பெறும் மக்களாவது மாறிவிடுவார்கள் என்று நிதியமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதிய பென்ஷன் திட்டத்தை தேசிய முற்போக்கு கூட்டணி இல்லை, ஐக்கிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே முன்னெடுத்தது என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.