விட்ட இடத்தில் இருந்து தொட்டு தொடரும் டாடா..
அமெரிக்க நிறுவனமான ஃபோர்ட், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் தங்கள் உற்பத்தியை நிறுத்திக்கொண்டு நடையை கட்டியது உலகளவில் பெரிய விவாதப்பொருளாக மாறியது.இந்த நிலையில் குஜராத் மாநிலம் சனானந்த் பகுதியில் இருந்த ஆலையை அப்படியே விற்றுவிட்டு சென்ற போர்ட் நிறுவனம், சென்னையிலும் இதே பாணியை பின்பற்றியது. இந்த ஆலைகளை டாடா குழுமம் கிடைத்தவரை லாபம் என்று மலிவான விலையில் வாங்கி சமயோசிதமாக செயல்பட்டுள்ளது. சனானந்த் பகுதியில் உள்ள ஆலையில் ,தங்களுக்கு தேவையான மாற்றங்களை தற்போது டாடா நிறுவனம் செய்து வருகிறது. இந்த சூழலில் தங்கள் நிறுவன வணிக ரீதியிலான உற்பத்தியை அடுத்த ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் செய்ய இருப்பதாக டாடா குழுமம் அறிவித்துள்ளது. வெறும் 726 கோடி ரூபாய்க்கு ஃபோர்ட் நிறுவன பங்குகளை டாடா வாங்கிக்கொண்ட நிலையில், ஒரு வருடத்துக்கு சராசரியாக 3 லட்சம் மின்சார கார்களை சனானந்த் ஆலையில் உற்பத்தி செய்ய டாடா திட்டமிட்டுள்ளது. தற்போது ஃபோர்டிடம் இருந்து வாங்கிய ஆலைக்கு பக்கத்திலேயே டாடாவின் மற்றொரு ஆலை உள்ளதால் உற்பத்தியை இரட்டிப்பாக்க இது ஏதுவாக அமைந்துள்ளது. 2030ம் ஆண்டுக்குள் 30 விழுக்காடு சிஎன்ஜி,30விழுக்காடு மின்சார வாகனம், 30 விழுக்காடு எரிபொருளில் இயங்கும் கார்களை விற்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது. அதுவரை எரிபொருளில் இயங்கும் கார்கள் விற்கத்தான் செய்யும் என்றும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.