1333 நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து ஓடிவிட்டன!!
ஒரு பன்னாட்டு நிறுவனத்தை நிர்வகிப்பது என்பது சாதாரண விஷயமல்ல, ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வகையான விதிகள் இருக்கும். அவற்றையெல்லாம் சமாளித்து நடத்தப்படும் தொழில் லாபகரமாக இல்லாவிட்டால் அந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட தனி நாட்டில் இருந்து வெளியேறுவதை வழக்கமாக கொண்டுள்ளன. இந்த நிலையில் இந்தியாவில் 1,333 பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை மூடிவிட்டு ஓட்டம்பிடித்துள்ளன. ஆனால் அதே நேரம் 4ஆயிரத்து 900 புதிய பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் தொழிலை வளர்த்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் புள்ளிவிவரமாக வெளியிட்டுள்ளது. எத்தனை நிறுவனங்கள் இந்தியாவில் தாக்குப்பிடிக்கின்றன,எத்தனை நடையை கட்டின என்பது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் இந்த பதிலை அளித்துள்ளார். 4ஆயிரத்து 906 நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் தொழிலை தொடங்கியுள்ளதால் ஏகப்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக சோம் பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஆனால் எந்த காலகட்டத்தில் இருந்து எந்த காலகட்டத்துக்குள் இந்த எண்ணிக்கை என்பதை அமைச்சர் கூற மறுத்துவிட்டார்.