அதானி விவகாரம்: சாட்டையை சுழற்றிய உச்சநீதிமன்றம்!!!
அதானி குழுமத்தின் பங்குகள் மிகைப்படுத்தி விற்கப்பட்டதாக அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையை அடுத்து பங்கு வணிகம் மேற்கொள்வோரின் நலனை கருத்தில் கொண்டு அதானி குழுமம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் 4 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு கடந்ததிங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நிபுணர்கள் குழு அமைத்து முறைகேடுகள் குறித்து விசாரிப்பதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்த வழக்கு நேற்று (பிப் 17ம் தேதி) விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சந்திரசூட்,, நரசிம்மா மற்றும் பரித்வாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணை நடந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்கள், சீல் வைக்கப்பட்ட கவரில் நிபுணர்கள் குழுவை பரிந்துரைத்தனர். ஆனால் இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். இந்த விவகாரத்தில் முதலீட்டாளர்கள் ஏராளமானோரின் வாழ்க்கையும் அடங்கியுள்ளதால் இந்த வழக்கில் ஒளிவு மறைவே இருக்கக்கூடாது என்ற உச்சநீதிமன்றம், தாங்களே ஒரு விசாரணைக் குழுவை அமைக்க இருப்பதாக கூறியது. இதற்கு பதில் அளித்துள்ள செபி தரப்பு, ஏற்கனவே ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக விசாரணை நடைபெறுவதாகவும், இருதரப்பு ஆவணங்களும் சரிபார்க்கப்படுவதாகவும் கூறியிருந்தது. பங்குச்சந்தை முறைகேடுகளை சரி செய்ய நீதிமன்றமே நேரடியாக களமிறங்கியது இந்தியா மட்டுமின்றி உலகமே உற்றுநோக்கப்படும் அம்சமாக பார்க்கப்படுகிறது.