விப்ரோ நிறுவனம் இப்படி செய்யலாமா…!!
ஒருத்தரை 10 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு அழைத்துச்சென்றுவிட்டு, வேலை அதேதான் ஆனால் சம்பளம் 5 ரூபாய்தான் தருவேன் என்பது எப்படி கசக்குமோ அதே நிலைதான் தற்போது விப்ரோவில் பிளேஸ் ஆன மாணவர்களின் மனநிலையும் உள்ளது. 2022-ல் படித்து முடித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் கையில் பட்டத்துடன் விப்ரோ நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள் ஆனால் அவர்களை வேலைக்கு அழைப்பார்கள் அழைப்பார்கள் என்று காத்திருந்து காத்திருந்து வருடம் 2023ஏ வந்துவிட்டது.இன்னும் விப்ரோவில் இருந்து சிலரை பணிக்கு அமர்த்த முடியவில்லை. உலகளவில் பல நாடுகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பணியாளர்களை குறைத்து வருவதும், நிலையற்ற சூழல் காணப்படுவதும், பல்வேறு அழுத்தங்கள் காரணமாகவும் விப்ரோவில் ஃபிரஷர்களுக்கு வேலை தருவதில் சிக்கல் நிலவுகிறது. ஆண்டுக்கு ஆறரை லட்சம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு எடுக்கப்பட்டவர்கள் 3.5லட்சம் ரூபாய்க்கு வேலை செய்ய முடியுமா என்று மின்னஞ்சல் சென்றுள்ளது. சம்பளம் குறைவாக இருந்தாலும் வரும் மார்ச் மாதமே உங்களுக்கான பணி துவங்கிவிடும் என்றும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளோரை உடனடியாக பணியில் சேர்க்கும் திட்டத்தை விப்ரோ செய்து வருகிறது. படித்து முடித்து இத்தனை மாதங்கள் கழித்து தற்போது குறைவான சம்பளம் தருவோம் என்பது நியாயமற்ற செயல் என்றும் இதனை கடந்தாண்டே சொல்லி இருந்தால் வேறு வேலைக்கு சென்றிருப்போம் என்றும் தேர்வானவர்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில் 452 புது பணியாளர்களை விப்ரோ நிறுவனம் எடுத்துவிட்டு அவர்களை பணிநீக்கம்செய்த சர்ச்சை அடங்குவதற்குள் அடுத்த பிரச்னை ஏற்பட்டுள்ளதால் விப்ரோ நிறுவனத்தின் மீதான நம்பிக்கை இளம்பணியாளர்கள் மத்தியில் குறைந்து வருகிறது.